January 16, 2026
தண்டோரா குழு
கோவை எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா மற்றும் நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா,கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக மையத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து,வரவேற்றுப் பேசினார். திருமதி பிரியங்கா சுந்தர், சிறப்பு விருந்தினர் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரவேற்பு அளித்தார்.
அதைத்தொடர்ந்து மாண்புமிகு இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இலச்சினையை வெளியிட்டார். சிறப்பாகப் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“1975 ஆம் ஆண்டில் ஆரம்பித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இன்று பொன்விழா கண்டுள்ளது. உண்மையிலேயே நம் கோவை மண்ணிற்கு மகுடம் சூட்டியதாக இதனை நான் பார்க்கின்றேன்.
கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை மற்றும் கல்லூரி புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதற்கு தரமான மருத்துவர்கள், தாயுள்ளத்தோடு கவனித்துக் கொள்ளும் செவிலியர்களின் பங்கு அளப்பரியது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவச் சுற்றுலாவைத் தொடங்கி வைத்து, அதை செயல்படுத்திய பாராட்டுதலுக்குரியது.
எல்லோருக்கும் சிறப்பான சிகிச்சை, நோய்களுக்கான தீர்வு என்பது சாதாரணமானது அல்ல. அது கடுமையான பயணம். அதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் சேவை மனப்பான்மையும், அர்ப்பணிப்பு உணர்வுமே என்றால் அது மிகையாகாது. இந்த சாதனை 100 ஆண்டுகள் மேலும் நிச்சயம் தொடரும்.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமைத்தாங்கி வருகின்றார். இந்த அறக்கட்டளையை மெருகேற்றிக் கொண்டிருக்கும் இணை நிர்வாக அறங்காவலர் எஸ்.நரேந்திரன், அறங்காவலர்கள் வி.ராமகிருஷ்ணா மற்றும் டி.லக்ஷ்மிநாராயணஸ்வாமி ஆகியோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயர்தரமான நவீன மருத்துவ உபகரணங்களோடு இன்றைய ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு சிகிச்சை வரை தனது மருத்துவ வளர்ச்சி ஓர் அபரிமிதமான இடத்தைப் பெற்றுள்ளது ஸ்ரீராமகிருஷ்ணாமருத்துவமனை. நரம்பியல், இருதயவியல்,புற்றுநோயியல், ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ,1000 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.
இங்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, டூயல்ஹெட்சி. டி, 2 எம். ஆர். ஐ மற்றும் 4 கார்டியாக்கேட்டரைசேஷன் ஆய்வகங்கள் போன்றஅதிநவீன கருவிகளின் நிபுணத்துவம் மருத்துவர்களுக்கு நோயறிதல் மற்றும் மருத்துவ பராமரிப்புக்கான நவீன முறைகளை வழங்கி உதவுகின்றது. இங்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப்பணியாளர்கள் பணிபுரிந்து வருவது சிறப்புக்குரியது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது மருத்துவ சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் உடல் உறுப்புதானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த 8 மணி நேரத்தில் 13,206 பேர் உறுப்புதானம் செய்ய பதிவு செய்து புதிய கின்னஸ் சாதனையை மருத்துவமனை நிகழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த மூன்று மாதங்களில் சுமார் 45,862 நபர்கள் உடல் உறுப்புதானம் ஒப்புதலை இணைய வழியில் பதிவுசெய்து மற்றுமொரு உலகச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
மாதத்திற்கு சுமார் 1,00,000 ஆய்வக ஆய்வுகளைச் செய்யும் வகையில் அதிநவீன ஆய்வகமும் நோயாளிகள் விரைவாக அறிக்கைகளைப் பெற உதவும் வகையில் ரூபாய் 5 கோடி செலவில் தானியங்குப்படுத்தப்பட்டுள்ள ஆய்வக செயல்முறை அமைப்பும் உள்ளது. மேலும் 14 அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்களையும்,MICU,IMCU, NICU & PICU வசதிகளையும் முழுமையாகக் கொண்டுள்ளது.
புற்றுநோய்க்கான உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை வழங்குவது அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பக்கவாத நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட பக்கவாத சிகிச்சை மையம் இம்மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றது.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக உயிர்காக்கும் ஸ்வாப் லிவர் மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை முழுமையாக அமல்படுத்தியுள்ளது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளைக் கடக்கும் இதே தருணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனது தடத்தினைப் பதித்துள்ளது. அறவழியில் செயல்படும் மகத்தான இந்நிறுவனம், மேலும் சிறப்பாகச் செயல்பட்டு இன்னும் பல உயரத்தை அடைய வேண்டும்.”
இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
அதைத்தொடர்ந்து மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள், 15 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
விழாவில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர்கள் அறங்காவலர்கள் வி.ராமகிருஷ்ணா, டி. லக்ஷ்மி நாராயணஸ்வாமி,அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் இணை நிர்வாக அறங்காவலர் எஸ்.நரேந்திரன் நன்றி கூறினார்.