January 14, 2026
தண்டோரா குழு
எந்த இடத்திலும், எவ்விதமான சூழலிலும் கலப்படத்துக்கு இடமில்லை’ என, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
1979ல் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டது. 45 ஆண்டுக்கு மேலான பாரம்பரியத்துடன் இனிப்பு,கார வகைகளை தயாரித்து விற்கிறோம்.கோவை,திருப்பூர், மேட்டுப்பாளையம்,ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி உட்பட வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என, 68 கிளைகள் உள்ளன. 50 ஆயிரம் சதுரடியில் உலகத்தரம் வாய்ந்த கிச்சன் செயல்படுகிறது.
உயர் தரம்,சுவை மற்றும் நம்பகத்தன்மைக்காக எங்கள் தயாரிப்புகள் பொதுமக்களிடையே தனித்த பெயரை பெற்றுள்ளன.இந்நிலையம் தரம், சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுகிறது.மூலப்பொருட்கள் FIFO (முதலில் வந்தது முதலில் பயன்படுத்தப்படும்)முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
பொதிப்பு மற்றும் லேபிளிங் முறைகள் அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்படுகின்றன.
இந்த உற்பத்தி நிலையம் FSSAI விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி, பாதுகாப்பு,சுத்தம் மற்றும் தயாரிப்பு தரத்தை உறுதிப்படுத்துகிறது.நெய்வேதியம் கிச்சன் எப்போதும் உற்பத்தி தரம், சுத்தம் மற்றும் ஒழுங்குமுறை கடைப்பிடிப்பில் உறுதியாக உள்ளது.
சுத்தமான நெய்யினால் தயாரிக்கும் இனிப்புகளே,ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.அந்த காலம் முதல் இந்த காலம் வரை இத்தொழிலுக்கு நாங்கள் வைத்திருக்கும் சத்தியம், தர்மம் என்பது என்றுமே தொழிலில் உண்மையை சொல்வது.பாதாம் அல்வா என்றால் பாதாம் பயன்படுத்தி தயாரிப்பது,சுத்தமான நெய் என்றால் சுத்தமான நெய் பயன்படுத்துவது.
எந்த இடத்திலும், எவ்விதமான சூழலிலும் கலப்படத்துக்கு இடமில்லை. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஸ்வீட்ஸின் தரம் மட்டுமின்றி, நாங்கள் பின்பற்றும் சத்தியம். எந்த இடத்திலும் தவறியதில்லை. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே சொத்து.அதன் மூலமே வளர்ந்திருக்கிறோம்; உலகம் முழுவதும் பேசப்படுகிறோம். எக்காரணம் கொண்டும்,நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட மாட்டோம்.தொழில் தர்மத்துக்கு விரோதமாக எப்போதும் எங்கள் தலைமுறையே எந்த செயலும் செய்யாது.
எந்த தயாரிப்பிலும் கலப்படம் இருப்பதாக எந்த ஆய்வக அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை.ஆய்வு செய்யும்போது,மூலப்பொருட்களின் தரத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவர்.இது வேறு, விற்கும் பொருளை ஆய்வு செய்வது வேறு.தரம் குறைவது கலப்படம் கிடையாது. வனஸ்பதி கலந்திருப்பதாக தகவல் எவ்வாறு வெளியானதென தெரியவில்லை; யூகத்தின் அடிப்படையில் வெளியாகியிருக்கலாம். எப்.எஸ்.எஸ்.ஐ.,அறிக்கையில் கிடையாது. எவ்வித அபராதமும் விதிக்கவில்லை. தொழில் தர்மத்துடன் செயல்படுவதால், தலை நிமிர்ந்து செயல்படுகிறோம். தரத்தில் இருந்து ஒரு இஞ்ச் கூட விலகியதில்லை.
எங்களின் எந்த தயாரிப்பிலும், தயாரிப்பு செயல்முறையின் எந்த நிலையிலும் நெய் மாற்றப்படவில்லை, அல்லது வனஸ்பதி போன்ற மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை.எங்கள் தயாரிப்புகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகளை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் அனைத்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடனும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.