December 23, 2025
தண்டோரா குழு
இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் (IMTEX), IMTEX FORMING 2026 சார்பில், ஆசியாவின் மிகப்பெரிய உலோக உருவாக்கம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களுக்கான கண்காட்சி, 2026 ஜனவரி 21 முதல் 25 ம் தேதி வரை, பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் (BIEC) நடத்துகிறது.
இக்கண்காட்சி,46,000 சதுரமீட்டர் பரப்பளவில், 4 அரங்குகளில் நடப்பதால், 20 நாடுகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். உலகளவில் உள்ள தொழில்துறை தலைவர்களை இக்கண்காட்சி பெங்களூருவிற்கு அழைத்து வருகிறது.
கண்காட்சியின் முக்கிய அம்சங்கள்:
கருவி தொழில்நுட்பம் (Tooltech): இது இயந்திரக் கருவி பாகங்கள், அளவீட்டுத் தீர்வுகள், CAD/CAM மென்பொருள்கள் மற்றும் டூலிங் அமைப்புகள்,அத்துறையின் சமீபத்திய வளர்ச்சி குறித்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறது
டிஜிட்டல் உற்பத்தி (Digital Manufacturing):கூடுதல் உற்பத்தி (Additive Manufacturing) மற்றும் ‘தொழில்துறை 4.0’ சார்ந்த நிகழ்கால சிக்கல்களுக்கான தீர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது.
வெல்ட் கண்காட்சி (Weldexpo): இந்திய வெல்டிங் நிறுவனத்துடன் (IIW-India) இணைந்து நடத்தப்படும் இக்கண்காட்சி, நவீன வெல்டிங் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறது.
Moldex India மற்றும் Fastenex India: மெஸ்ஸி ஸ்டட்கார்ட் (Messe Stuttgart) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியில், மோல்டிங் மற்றும் ஃபாஸ்டென்னர், பிக்சிங் தொழில்நுட்பங்களில், கவனம் செலுத்துகிறது.இவை அனைத்தும், இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் (IMTEX) IMTEX FORMING 2026 உடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
உலோக உருவாக்கும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கு:
இதன் 9 வது பதிப்பு, 2026 ஜனவரி, 22, 23 ம் தேதிகளில் நடைபெறும். இதில் உலோக உருவாக்கம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் உள்ள புதிய நடைமுறைகள், உபகரணங்கள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.i2 அகாடமியா ஸ்கொயர் (Academia Square): கல்வி நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) முயற்சிகளை, தொழில்துறையினரிடம் சமர்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்ருதி- இளைஞர் திட்டம்(jagriti- IMTMA Youth Programme):
இளம் தொழில்முனைவோர் இடையே உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டம்.இக்கண்காட்சியில்,ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று, நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள், மின்சாரம், ரயில்வே, கட்டுமான உபகரணங்கள், பொது மற்றும் கனரக பொறியியல், மூலாதார பொரு்கள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், பார்வையாளர்களாக கண்காட்சிக்கு வருகைபுரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சி குறித்து, இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IMTMA) தலைவர் மோகினி கெல்கர் கூறியதாவது:
தற்போது, இந்திய இயந்திரக் கருவி சந்தையில் உலோக உருவாக்கம் துறை (Metal Forming) 29% பங்களிப்பை கொண்டுள்ளது.இருப்பினும் வரும் காலங்களில், இத்துறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.2024–25 நிதியாண்டில் (FY25), உலோக உருவாக்கும் இயந்திரக் கருவிகளின் நுகர்வு 9,139 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம் உற்பத்தி மதிப்பு, ரூ.2,696 கோடியாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக, உலோகம் உருவாக்கம் இயந்திர கருவிகளின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு, சராசரியாக 6% அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் கருவிகளில், அழுத்தி கருவிகள் (presses) முதலிடத்தில் உள்ளன. அதை தொடர்ந்து பிரஸ் பிரேக்ஸ், வளைக்கும் இயந்திரங்கள், வெ ட்டும் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன,’’ என்றார்.
இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IMTMA) இயக்குனர் ஜெனரல் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜிபக் தாஸ்குப்தா கூறுகையில்,
லேசர்,லேசர் சார்ந்த பயன்பாடுகள், ஃபைபர் லேசர் இயந்திரங்கள், 3D பிரிண்டிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் (Pick-and-place) போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு, கண்காட்சியில், அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கண்காட்சி மூலம், 2026 ல், உள்நாட்டுத் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் அவற்றின் ஏற்றுமதியை விரைவுபடுத்தும், என்றார்.