November 20, 2025
தண்டோரா குழு
கோவையில் மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்து விநியோகம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க கடந்த 2023 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிக்காக முதலில் ரூ.167.25 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ரூ.47 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. செம்மொழி பூங்கா பணிகள் முழு வீச்சில் நடைபெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. வருகிற 25 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த 15 ம் தேதி செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உணவுகளை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு வந்து விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாநகரில் சேகரமாகும் குப்பை, ஓட்டல் கழிவுகள் அள்ளும் குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்து உள்ளனர்.இது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை காட்டுவதாகவும், கிருமிகள் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பிரச்னை, பணி நேரம் முரண்பாடு, மாநகராட்சி ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது என பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊழியர்கள் கூறி வரும் வேளையில், இது போன்று குப்பை வண்டியில் கொண்டு வந்து உணவு வழங்கியது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.