May 25, 2025
தண்டோரா குழு
பொறியியல், தொழில் மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய,மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் கேபிஆர் கல்வி நிறுவனங்கள் கேபிஆர் லெகஸி விருதுகள் 2025 என்ற விழாவினை நடத்தியது.
கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஐசிடிஇ-ன் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியும் மற்றும் அனுவதினி ஏஐ-ன் தலைமை செயல் அதிகாரியுமான,முனைவர் புத்த சந்திரசேகர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
தலைமையுரையாற்றிய கே.பி.ராமசாமி கல்வித் திறனையும் தேசிய வளர்ச்சியில் அதன் பங்களிப்பையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.மேலும் கேபிஆர் கல்வி நிறுவனங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் எப்போதும் ஊக்குவிக்கும் என்றார்.
பணியாளர்களுக்கு கல்வி வழங்குவதன் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கேபிஆர் அவர்களின் தலைமைப்பண்பை சிறப்பு விருந்தினர் புத்த சந்திரசேகர் புகழாரம் செய்தார்.மேலும் இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் தரவு பாதுகாப்பையும் பற்றி எளிமையாக விளக்கினார்.
விழாவில் வளர்ந்து வரும் கல்வியாளர், புகழ்பெற்ற பேராசிரியர்,சிறந்த ஆராய்ச்சியாளர்,நட்சத்திர முன்னாள் மாணவர்,வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் ரூ 25,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருக்கு ரூ.1,00,000 வழங்கப்பட்டது.
உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது,பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டட பொறியியல் பேராசிரியரான முனைவர் எஸ் ராஜசேகரனுக்கு துறை சார்ந்த அவரது நீடித்த பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து,பல்வேறு கல்வி மற்றும் தொழில்த் துறைகளைச் சார்ந்த 21 பேர் கொண்ட குழுவினர், விருதுக்குரியவர்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.