May 3, 2025
தண்டோரா குழு
செயற்கை கருத்தரிப்பு (IVF) உருவகப் பயிற்சி பட்டறை PSG மருத்துவமனைகள், PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், Centre for Translational Research in Reproductive Health (CTR2H), PSGIAS கோயம்புத்தூர் மற்றும் Reprosci Biosciences Pvt Ltd, பெங்களூரு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
சமீப காலமாக ஆண் பெண் இருபாலருக்கும் கருவுறாமை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய கருவுறாமை பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, இயற்கையாக கருத்தரிக்க முடியாத நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும்.
தொழில்நுட்ப சிகிச்சை முறை செயற்கை கருத்தரித்தல் (IVF) ஆகும். IVF எனப்படுவது கருமுட்டை மீட்டெடுப்பு, கருத்தரித்தல் மற்றும் புறஒலி அலகீடு (Ultrasound scan) வழிகாட்டுதலின் கீழ் கருப்பைக்கு மாற்றுதல் ஆகிய செயல்முறைகளை உள்ளடக்கியது. இந்த பயிற்சிப் பட்டறையில் நோயாளிகளுக்கு மிக துல்லியமாக கரு பொருத்துவதற்காக IVF நிபுணர் மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க, உருவக அடிப்படையிலான கல்வி மருத்துவப் பயிற்சி, ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உருவகப்படுத்துதல் பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதன் மூலம், சிமுலேட்டர்களில் பயிற்சி செய்வது மருத்துவர்கள் நோயாளிகளை நேரடியாக பரிசோதனைக்கு உட்படுத்தாமல், நுட்பங்களை மேம்படுத்தவும், முக்கியமான மருத்துவ முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களை நிர்வகிக்கவும் வழி வகுக்கிறது.
இந்தப் பயிற்சிப் பட்டறை, குறிப்பாக செயற்கை கருத்தரித்தல் முறையில் உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் அனைத்து நுட்பங்களையும் பயன்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது . இந்தப் பயிசிப் பட்டறை, பெங்களூரில் உள்ள ரெப்ரோசி பயோசயின்சஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, Centre for Translational Research in Reproductive Health (CTR2H), PSG Institute of Advanced Studies (PSGIAS), PSG சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PSGIMSR) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
மகப்பேறியல் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற முதுகலை மருத்துவ மாணவர்கள், IVF நிபுணர்கள், Embryologist மற்றும் IVF பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டுமே இந்தப் பயிற்சிப் பட்டறை பிரத்தியேகமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சிப் பட்டறையை தலைமை விருந்தினராக டாக்டர் ஜே. எஸ். புவனேஸ்வரன், இயக்குநர், PSG மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர் டாக்டர் டி. எம். சுப்பாராவ், முதல்வர் PSGIMSR ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாக்டர் லதா மகேஸ்வரி, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறைத் தலைவர் PSGIMSR வரவேற்புரை வழங்கினார். டாக்டர் ஜி. ஆதிலட்சுமி, IVF நிபுணர், PSGIMSR பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிப் பட்டறை குறித்து விளக்கினார்.
டாக்டர் ஆர். செல்வகுமார், பேராசிரியர்மற்றும் துறைத் தலைவர் CTR2H, PSGIAS, நன்றியுரை வழங்கினார். செயற்கை கருத்தரிப்பு நிபுணர்களாகிய டாக்டர் கண்ணகி உத்ரராஜ், KMCH மற்றும் தாமரை கருவுறுதல் மையம், டாக்டர் ஜி. ஆதிலட்சுமி, கருவுறுதல் மருத்துவமனை மற்றும் இனப்பெருக்க மருத்துவ மையம், PSGIMSR, டாக்டர் வித்யா பிரேம் திருப்பூர் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை, டாக்டர் ஸ்வேதா அசோக் ஹர்னால் கர்பகுடி IVF மையம், பெங்களூரு, ஆகியோர் IVF, IVF ஆய்வகத்தை அமைத்தல், IVF தொழில்நுட்பத்தில் புதிய எல்லைகள், IVF நெறிமுறை, ஒழுங்குமுறை, IVF இல் சிமுலேட்டர்களின் பயன்பாடு மற்றும் AI தொழில்நுட்பங்கள் குறித்து முக்கிய சொற்பொழிவுகளை வழங்கினர்.
பெங்களூரில் உள்ள ரெப்ரோசி பயோசயின்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் திட்ட மேலாளர் பிரதீக் வாக்மரே, பயிற்சிப் பட்டறைக்கு வழங்கப்பட்ட சிமுலேட்டர்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள், IVF மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து, 75 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
ரெப்ரோசி பயோசயின்ஸ் உருவாக்கிய விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) அமைப்பைப் பயன்படுத்தி கருமுட்டை சேகரிப்பு சிமுலேட்டர், கரு பரிமாற்ற சிமுலேட்டர் மற்றும் IVF பயிற்சி போன்ற சிறப்பு சிமுலேட்டர்களில் அனைத்து பங்கேற்பாளர்களும் நேரடி அனுபவத்தைப் பெற்றனர். உருவகப்படுத்தப்பட்ட சிமுலேட்டர்களை மேலும் மேம்படுத்துவதற்காக அனைத்து பங்கேற்பாளர்களிடமிருந்தும் கருத்துகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.