• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“காப்பாற்றுங்கள் பொம்மலாட்டக் கலையை!”

February 25, 2017 ஜாகர்

பொம்மைகள் என்றாலும் கதை சொல்லும். பாட்டுப் பாடும், சண்டை போடும், காதல் புரியும், சோகமாக அழும்.அப்படியா என்று கேட்கத் தோன்றுகிறதா, அதுதான் பொம்மலாட்டக் கலை. உயிருள்ள மனிதர்களை மேடையில் நடிக்கச் செய்வது பெரிதல்ல. திரைமறைவில் இருந்துகொண்டு, மெல்லிய கயிறுகள் மூலம் பொம்மைகளின் கை, கால், தலை உடல் ஆகியவற்றை அசைத்து, ஒரு முழுமையான நாடகத்தையே பார்த்து ரசிக்கச் செய்யும் அற்புதக் கலைதான் பொம்மலாட்டம். பார்ப்போரை உண்மையிலேயே மெய்மறக்கச் செய்யும் கலைஅது.

நடிக்கும் பொம்மைகளுக்குப் பின்னணிக் குரலில் மனிதர்கள்தான் பேசுவார்கள். ஆனால், பொம்மைகளே பேசுவது போல் தெரியும். மெல்லிய கயிற்றினால் கட்டப்பட்டு, திரையின் மறைவில் இருப்போர் தங்களது அபாரத் திறமையால் கதைக் காட்சிக்கு ஏற்ப பொம்மைகளை அசைப்பர். ஆனால், பார்ப்போர் பொம்மைகள் உயிர்பெற்று நடிப்பதாகவே நினைப்பர்.

இத்தகைய அற்புதக் கலை குறித்து பள்ளி குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாரம்பரிய மிக்க இக்கலையை அழியாமல் காக்க தமிழக அரசாங்கம் முன்வர வேண்டும் என பொம்மலாட்டக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் மிக பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். திரைக்குப் பின்னால் இருந்தபடி பொம்மைகளை மெல்லிய கயிறு மூலம் ஆட்டியபடியே கதையைச் சுவையாகச் சொல்லும் ஓர் அழகான கலை. அசையும் பொம்மைகள் நடிகர்களைப் போலவே தோன்றி கதையை நடத்திச்ச செல்லும்.

இக்கலையின் மூலம் இதிகாசம், புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் போன்றவை அக்கலாத்தில் தெருக்கூத்துகளைப் போல் மக்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டன.

நகரங்களின் வளர்ச்சி நாகரிக மாற்றங்கள் போன்றவற்றால் இக்கலை முப்பது வருடங்களாக சரிவர நடத்தப்படாமல், மெல்ல மெல்ல அழிந்துவிட்டது. தமிழகத்தில் தற்போது பொம்மலாட்டம் நிகழ்த்துவோர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே குடும்பங்கள்தான்.

பொம்மலாட்டக் கலையைக் காப்பாற்றவும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே புரியவைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை மாவட்டம் கோவை புதூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான மூ. சீனிவாசன் (7௦ வயது) கடந்த பத்து ஆண்டுகளாக பழைய துணிகளைக் கொண்டு விதவிதமான பொம்மைகளை வடிவமைத்து, பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

பொம்மலாட்டக் கலை மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது நண்பரிடம் இக்கலையை முழுமையாக கற்றறிந்து கோவையில் உள்ள சிறு, தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இக்கலையைச் செய்துகாட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பள்ளிக் குழந்தைகள் எளிய வழியில் கல்வி கற்கவும் அவர்களுக்குப் பொம்மலாட்டக் கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளி பாடத் திட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள், வரலாற்றுக் கதைகள் போன்றவற்றைப் பாடல்களாகப் பாடி பொம்மலாட்டம் செய்துகாட்டி வருகிறார்.

இதன் மூலம் குழந்தைகள் மனத்தில் அந்தப் பாடம் மனத்தில் எளிதில் பதிந்துவிடுகிறது. பாடத்தை மனப்பாடமாக படிக்காமல், இது போன்ற கலைகள் மூலம் செய்முறை கல்வியாகப் பாடம் நடத்தும் போது குழந்தைகள் எளிதில் கல்வி கற்கவும், ஆர்வமுடன் பாடங்களை கவனிக்கவும் முடியும். இதுதான் பொம்மலாட்டக் கலையின் மிகப் பெரிய பங்களிப்பு.

“இக்காலக் குழந்தைகளுக்குப் பொம்மலாட்டம் என்பது என்ன, அது எப்படி நடத்தப்படும் என்பது கூட தெரியவில்லை. இந்தக் கலையை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்போது அதை விரும்பி கவனிக்கிறார்கள்., கணினியில் பாடம் சொல்லி தரும் தலைமுறைக்கு இக்காலத்து குழந்தைகள் வந்தாலும், பொம்மலாட்டம் மூலம் கவனிக்கும் குழந்தைகள் பாடங்களை ஊர்ந்து கவனிக்கின்றனர்.” என்றார் ஆசிரியர் ஒருவர்.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் தெருக்கூத்துகளையும் பொம்மலாட்டம் மூலம் அவர் நடத்தி வருகிறார்.

இது குறித்து சீனிவாசன் கூறுகையில்,

“தமிழக அரசு நாட்டுப்புற கலைகளில் ஒன்றான இந்த பொம்மலாட்ட கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வர வேண்டும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இந்தக் கலையைச் சொல்லித் தந்து பாடங்களை வாரம் ஒரு முறையாவது பொம்மலாட்டம் கலை மூலம் நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் பொம்மலாட்டம் என்ற அற்புதமான கலை அழியாமல் பாதுகாக்கப்படும்.

வயதாகி விட்டதால் என்னால் அதிக இடங்களுக்குச் சென்று வர முடியவில்லை. எனவே, இந்தக் கலை குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த எனக்கு ஒரு வாகனம் அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு அளித்தால் அனைத்துப் பள்ளிகளிலும் இலவசமாக பொம்மலாட்டம் நிகழ்த்தி ஆர்வத்தைத் தூண்டுவேன்“ என்றார்.

இக்கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு இதுவரை தனது ஓய்வூதிய பணத்திலிருந்து இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார் சீனிவாசன். அழிந்துவிட்ட பொம்மலாட்டக் கலையை மீட்க தமிழக அரசு முன் வரவேண்டும்.

மேலும் படிக்க