சுவாமி : காமாட்சியம்மன்.
தீர்த்தம் : பஞ்சகங்கை (எ) உலகாணி தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பகம்.
தலச்சிறப்பு :
காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் கயிலை மலையில், ஒளிமயமான தூய மணிமண்டபத்தில், முதன்மைப் பொருந்திய சிங்காதனத்தின் மீது, தன் அன்புக்கு உரிய உமாதேவி ஒரு பாகத்தில் இருக்க, வேதங்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தார். தாருகன் அழிவுக்குப் பின்னர் ஈசனும், தேவியும் கயிலை மலையில் தங்களுக்கு என அமைந்த ஏகாந்த மண்டபத்தில் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தேவி விளையாட்டாக ஈசன் முதுகுப்புறம் வந்து அவருடைய கண்களைத் தன் இரு கரங்களில் பொத்தினார். இதனால் உலகம் இருண்டது. இருளையே அறியாத தேவலோகம் ஒளி இழந்தது. எங்கும் இருள் சூழ்ந்ததால் படைப்புத் தொழில் நின்றது. யாகங்கள் தடைப்பட்டன. தவங்கள், தானங்களும் கைவிடப்பட்டன. தெய்வ வழிபாடு அறவே ஒழிந்தது. உயிர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வருந்தின. அறிவு வளர்ச்சித் தடைப்பட்டது. மறை நூல்கள் மறைந்தன. இருளின் வயப்பட்டு உலகமெல்லாம் மயங்கி நின்றன.
தேவர்களும் முனிவர்களும் தம் காரியங்கள் தடைப்படவே, என்ன ஆகியதோ? என்ன ஆபத்து சூழ்ந்ததோ? எனப் பதைபதைத்து சப்தமிட்டனர். இக்குரல் அன்னையின் திருச்செவியில் ஒலித்தது. உடன் அன்னை தன் திருக்கரங்களை இறைவன் திருக்கண்களிலிருந்து எடுத்தார். உடனே இறைவன் திருக்கண்கள் இரண்டும் ஒளிவீசின, மீண்டும் உலகம் புத்தொளிப் பெற்றது.
சிவபெருமான் தேவியை நோக்கி, நீ எமது கண்களை மூடிய நொடிப் பொழுதில், உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டு பாவம் சூழ்ந்தது. அப்பாவம் நீங்க, நீ பிராயச்சித்தம் செய்தாக வேண்டும் என்றார். அதற்கு வழியையும் கூறினார். தேவி, யாம் எழுந்தருளியிருக்கும் இடத்திலாவது, நம் அடியார் சிறப்புடன் வீற்றிருக்கும் இடத்திலாவது எம்மை வழிபடுவாயாக என்று அருளச் செய்தார். இறைவன் கூறியபடி அன்னை பிராயச்சித்தம் செய்வதற்குப் புறப்பட்டார்.
அன்னை இறைவனிடம் விடைபெற்று முதலில் காசி நகரத்தை அடைந்து, விஸ்வநாதரைப் பணிந்து வழிபட்டு, பின்பு தொண்டை நாட்டில் அமைந்துள்ள காஞ்சியை அடைந்த அன்னை, காஞ்சியில் உள்ள சிவத்தலங்களை முறையாகத் தரிசித்துக் கொண்டு திருவேகம்பத்தை அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரைக் கண்களால் கண்டனர். அதன் பிறகு அன்னை பிலாகாசத்தை அடைந்த 32 அறங்களைச் செய்து தவம் இயற்றி, பின்பு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார் என்பது புராண வரலாறு.
உலக நாயகியான காமாட்சி அன்னை எழுந்து அருள் புரியும் மண்டபம் காயத்திரி மண்டபம் என அழைக்கப்படுகிறது. அம்பிகை அச்சந்நிதியில் தென்கிழக்குத் திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். அமர்ந்த திருக்கோலத்தில், சுகாசனயோகத் திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலான படைக் கருவிகளைக் கரங்களில் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்து அருள்புரிந்து கொண்டுள்ளார்.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் : ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும்.
திருவிழாக்கள் :
மாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம்,
புரட்டாசியில் நவராத்திரி திருவிழா,
ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள்.
அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.
கோயில் முகவரி : அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில்,காஞ்சிபுரம் – 631 501, காஞ்சிபுரம் மாவட்டம்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்