• Download mobile app
26 May 2024, SundayEdition - 3028
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

December 21, 2018 findmytemples.com

சுவாமி : ஆபத்சகாயேஸ்வரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர்.

அம்பாள் : பெரியநாயகி, பிருகந்நாயகி, நாயகியம்மை.

மூர்த்தி : நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வள்ளி – தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன்.

தீர்த்தம்: வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே).

தலவிருட்சம் : எலுமிச்சை.

தலச்சிறப்பு : தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 22வது சிவத்தலமாகும். இத்தலம் கிழக்கு முகம் கொண்ட சிறிய கோவிலாக அமைந்துள்ளது. இத்தலத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபம் உள்ளது. அடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளது. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருகந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாள் பிராகாரத்தில் அக்கினிக்குக் காட்சி தந்த ஆதிமூல லிங்கம் உள்ளது. கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.

கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் ஆபத்சாகயேஸ்வரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இத்தல இறைவன் அக்னிபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை 5 நாட்கள் இத்தல இறைவன் மீது சூரிய ஒளி படும் நிகழ்ச்சி நடைபெறும். ஆகையால் இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி உள்ளது. ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.

இத்தலத்தில் அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வியில், சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இத்தல இறைவனை வருணன், அரிச்சந்திரன் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் அருள்பாலிகின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே உள்ளார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். ஆதிசங்கரருக்கு தனி சன்னதி உள்ளது. திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் உள்ளன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.

தல வரலாறு : பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினான். இதனால் தேவர்கள், தாரகனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டச் சென்றனர். ஆனால் அச்சமயம் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். தேவர்கள் மன்மதனின் உதவியால் சிவபெருமானின் யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய மன்மதனின் மனைவி ரதிதேவி, சிவபெருமானிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். சிவபெருமான் உரிய காலத்தில் மன்மதன் உயிர்பெற்று வருவான் என்று கூறினார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவபெருமானை எண்ணி தவமிருந்து வழிபட்டாள் ரதிதேவி. மன்மதன் சிவபெருமான் அருளால் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார். பிறகு, இத்தல இறைவனை மன்மதன் ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஆதியில் சிவபெருமான் திருக்குறுக்கை திருத்தலத்திலே மன்மதனை எரித்தார். கணவனை இழந்து வருத்தம் கொண்ட ரதிதேவியின் மீது மையல் கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபம் கொடுத்தாள். இதனால் மனம் வருந்திய சூரியபகவான், சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து இத்தல இறைவனை வழிபட்டான். சிவபெருமான் பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று சாபவிமோசனம் பெற்றான். இத்திருத்தலம் சூரிய பரிகாரத்திற்கு உகந்த தலம் ஆகும். தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் நீங்க ஈசனை பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அதில் திருஅன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை வழிபட்டான். எனவே இத்தலத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே உள்ள இத்தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

வழிபட்டோர் : வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்கள்.

பாடியோர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

திருவிழாக்கள் : மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.

அருகிலுள்ள நகரம் : மயிலாடுதுறை.

கோவில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
பொன்னூர் – பாண்டூர் அஞ்சல் – 609 203, (வழி) நீடூர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

மேலும் படிக்க