July 4, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி,2000 ரன்கள் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி,3 டி20,3 ஒருநாள் போட்டி,5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.இதையடுத்து,இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில்,டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி,முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு,159 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் அரைசதம் அடித்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டகாரர்கள் ரோகித் சர்மா,ஷிகர் தவான் (5) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.பின்னர் களமிறங்கிய ராகுல் அதிரடியாக விளையாடி 53வது பந்தில் சதம் எட்டினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (32) அவுட்டானார். கடைசியில் கோலி ஒரு சிக்சர் அடிக்க,18.2 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து,8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராகுல் (101),கோலி (20) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி,டி-20 அரங்கில் குறைந்த இன்னிங்சில் (56 இன்னிங்ஸ்) 2000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.