December 29, 2017
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் சாலை, நாச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துக்குமாரசாமி (67) விவசாயி அவரது மனைவி தெய்வாத்தாள் (62). இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு இவர்கள் வீட்டில் நீண்டநேரமாக கதவு திறந்து கிடந்த நிலையில், மின்விளக்கும் எரிவதை கண்டு, அப்பகுதியில் நள்ளிரவு ரோந்து வந்த போலீசார் சந்தேகம் அடைந்து சென்று பார்த்த பொழுது இருவரும் நள்ளிரவு அடித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் காவல்துறையினர் உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக கொலை நடந்திருக்கலாம் என அவினாசிபாளையம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.