October 2, 2018
தண்டோரா குழு
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.கடந்த மாதம் 7ம் தேதி மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐ.நா சபையில் பேசியதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை கைது செய்தனர்.
இதையடுத்து,பல்வேறு வழக்குகளில் கைதாகி 53 நாட்களாக வேலூர் மத்தியில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில்,சிறையில் அடைத்ததிலிருந்து அவருடன் யாரும் பேசக் கூடாது என்று அவரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது.சிறையிலேயே மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதற்கிடையில்,14 வழக்குகளிலிருந்து படிப்படியாக ஜாமீன் கிடைத்து வந்த நிலையில் நேற்று அவருக்கு அனைத்து வழக்குகளிலிருந்தும் ஜாமீன் கிடைத்தது.
இதனையடுத்து இன்று காலை வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த திருமுருகன் காந்தி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ச் ஆகி மதியம் 1 மணி அளவில் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில்,சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கின. இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அவர் வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தார்.அவரை மே 17 இயக்கத்தினர் வரவேற்றனர்.