August 20, 2018
தண்டோரா குழு
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இருந்து வ.உ.சி மைதானம் வரை அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
தமிழக அரசு நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு புதிய ஊதியத்தை அரசே நேரடியாக வழங்க கோரினார்.விற்பனையாளர் காலிப்பணியிடம் நிரப்பவும்,ஒய்வூதியம்,கருணை ஒய்வூதியம் வழங்க வலியுறுத்தினர்.நியாய விலைக்கடைகளில் ஆய்வு என்ற பெயரில் பல்துறை அலுவலர்கள் மாமூல் பெறுவதை அரசு ஒழித்து நடவடிக்கை எடுக்க வேண்டினர்.
மேலும்,நுகர்பொருள் வாணிப கழகத்தால் வழங்கப்படும் குடிமைப் பொருட்கள் தரமாகவும் சரியான எடையில் வழங்கவும்,முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்தனர்.அரசு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் செப்டம்பர் மாதத்தில் இருந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.இந்த பேரணியில் கோவை, நீலகிரி, திருப்பூர்,திண்டுக்கல்,கரூர்,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.