August 20, 2018
தண்டோரா குழு
தமிழக அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே தமிழக அரசிடம் மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பாக மாநில அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
இதுவரை மாநில அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று நோயாளிகள் பாதிக்காத வண்ணம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.மத்திய அரசு மருத்துவர்கள் குறுகிய காலத்தில் பணி உயர்வு பெறுவதாகவும்,7 ஆண்டுகள் கழித்த பின்பு தான் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதாக குற்றம்சாட்டினர்.
மேலும்,வருகின்ற 24ம் தேதி அனைத்து மருத்துவர்களும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று மனு கொடுக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைக்காமல் மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரவிசங்கர் தெரிவித்தார்.