October 8, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே இன்று காலை பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.அப்போது,தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் நிதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.இச்சந்திப்பின் போது அமைச்சர் டி.ஜெயக்குமார்,தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,
“தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள்,நிதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும்.சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரதன ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுத்தேன்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வலியுறுத்தினேன்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்ட வலியுறுத்தினேன்.கூட்டுறவு சங்க தேர்தலில் 93 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது குற்றம் மட்டுமே சாட்டப்பட்டு உள்ளது,அது நிரூபிக்கப்படவில்லை. காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால்,இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியது தான். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.டிடிவி தினகரன் ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.முழுமையாக விளக்கம் அளித்துவிட்டார்.இதில் மேற்கொண்டு பேச எதுவும் இல்லை.மேலும் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்”.இவ்வாறு பேசினார்.