January 4, 2018
தண்டோரா குழு
ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகத்தில் அரசு பேருந்து வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் 2.40 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2.57% ஊதிய உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காததால் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை,கோயம்பேடு,திருவான்மியூர்,பாரிமுனை,வடபழனி,தாம்பரம்,மாதவரம் மற்றும் புறநகர பஸ் டிப்போக்களில் பஸ்களை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையிலுள்ள பஸ் டிப்போவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,பஸ்கள் இயக்கப்படாததால், மாலை நேரத்தில் வீடு திரும்பும் பொதுமக்கள் அனைவரும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதைப்போல் திருச்சி, கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மன்னார்குடி, எண்ணூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பஸ்களும் டிப்போவிற்கு திரும்பி சென்று நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.