September 28, 2018
தண்டோரா குழு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கர்நாடகா அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மறைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் ஜெயலலிதா மறைந்ததால் இவ்வழக்கிலிருந்து அவரை விடுவித்தனர்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது.அம்மனுவில் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுதித்தது ஏற்புடையதாக இல்லை எனவும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா மறைந்தார்.எனவே,வழக்கில் அவரையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மறுசீராய்வு மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் மதன் பி லோகர் ஆகியோரது அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது கூறிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் தலையிடப்போவதில்லை என்றும்,முந்தைய தீர்ப்பு சரியாகத்தான் உள்ளது என்று கூறி,கர்நாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததோடு மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.