• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை – மு.க ஸ்டாலின்

November 10, 2018 தண்டோரா குழு

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு,புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார்.எனினும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது.இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா,நேற்று இரவு திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

“மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.அதனைக் காலில் போட்டு மிதித்து,அதன் மீது ஏறி நின்று,சிறிதும் மனசாட்சியின்றி,நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சி அ அளிக்கிறது.

மிகமோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும்,பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக,இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி,வருகின்ற 14ஆம் தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும்,தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல – அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல்! தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ “அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்” என்று ஒதுக்கி வைத்து விட முடியாது.பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

தனது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக கங்கணம் கட்டிக் கொண்டு “ஹிட்லர்” போல் செயல்பட்ட ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்ட போது மத்திய அரசு அமைதி காத்தது.ராஜபக்சேவும் – அதிபர் சிறிசேனாவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை,14 நாட்களுக்கு மேல் வேடிக்கை பார்த்தது மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் இத்தகைய மவுனம் இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது. இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு,இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியாக,பாதுகாப்பாக,கண்ணியத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்! இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க