• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனத்துக்கு முறைகேடாக டெண்டர் – மு.க.ஸ்டாலின் புகார்

August 30, 2018 தண்டோரா குழு

ஸ்மார்ட் நகரம் தொடர்பான டெண்டர் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்படுகிறது என மு.க.ஸ்டாலின் புகார் கூறி உள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி டெண்டர் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைத்து லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் பத்து ஸ்மார்ட் நகரங்களில் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் வடிவமைப்புப் பணிகள் குறித்த டெண்டர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அது தொடர்பான விவரங்கள் அனைத்து பத்திரிகைகளிலும் விரிவாக வெளிவந்திருக்கிறது.ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் பணி நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ஒரு முன்னோடித் திட்டம் மட்டுமின்றி,தமிழக வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பிற்கும் மிகவும் முக்கியமானதொரு திட்டமாகும்.

தமிழக முன்னேற்றத்திற்கான இந்த ஸ்மார்ட் நகர திட்டப் பணிகளை நிறைவேற்ற விடப்படும் டெண்டர்களில்,ஆழமான உள்நோக்கத்துடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலையீடும்,குறுக்கீடும் தலைவிரித்து தாண்டவமாடுகிறது.பத்து ஸ்மார்ட் நகரங்களிலும் மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் வடிவமைப்பு பணிகளுக்கான டெண்டரை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் பரிசீலனை செய்து வருகிறது.அந்த டெண்டரில் பங்கேற்ற ஒரு தனியார் நிறுவனம் மெட்டல் ஷீட் தயாரிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்ட நிறுவனம் என்றும்,அந்தத் தனியார் நிறுவனத்துக்கு மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப் பணிக்கான டெண்டரை வழங்க இயலாது என்றும் டுபிட்கோ மறுத்திருக்கிறது.

இதனால் டுபிட்கோவின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரகாந்த் காம்ப்ளே அதிரடியாக மாற்றப்பட்டார்.ஏற்கெனவே,சர்ச்சைக்குரிய இந்த தனியார் நிறுவனத்துக்கு சென்னை மாநகரத்தில் மின்னணு நிர்வாக ஒப்பந்தம் வழங்கியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயனிடம் டுபிட்கோவின் கூடுதல் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு கட்டங்களாக ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை,கோவை மாநகராட்சிகளும்,இரண்டாவது கட்டமாக மதுரை,சேலம், தஞ்சாவூர்,வேலூர் மாநகராட்சிகளும்,மூன்றாவது கட்டமாக தூத்துக்குடி,திருநெல்வேலி,திருப்பூர், திருச்சி மாநகராட்சிகளும், நான்காவது கட்டமாக ஈரோடு மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால்,சீர்மிகு நகரங்கள் அமைக்கும் பணிகளில் மாதங்கள் பல ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மாநிலங்களவையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,டுபிட்கோவின் இந்த ஸ்மார்ட் நகரங்கள் டெண்டரிலும்,சீர்கெட்ட முறையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரடியாக தனது பினாமி நிறுவனத்திற்காக தலையிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

அதிலும் குறிப்பாக இயந்திரங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஸ்மார் நகர மின்னணு நிர்வாகம் தொடர்பான பணிகளை அளிக்க அழுத்தம் கொடுப்பதும்,தனது பதவியை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்வதும்,லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைக்குரிய குற்றங்களாகும்.மேலும் இது,தமிழக வளர்ச்சிக்கான மிக முக்கியமான ஸ்மார்ட் நகர திட்டத்தைச் சிதைத்து,பத்து சீர்மிகு நகரங்களின் உட்கட்டமைப்புக்கே உலை வைக்கும் முயற்சி என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் டெண்டர் முறைகேடுகள் தொற்றுநோய் போல் பரவி,பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன.எல்.ஈ.டி விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும்,அது அமைச்சர் வேலுமணியின் பினாமிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத உத்தரவு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

சென்னை மாநகராட்சி,கோவை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அமைச்சரின் பினாமிகளும், அவர்கள் சார்ந்த நிறுவனங்களும் டெண்டர்களில் வரையறைகள் அனைத்தையும் மீறி ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி,சிண்டிக்கேட் அமைத்தும் வரலாறு காணாத டெண்டர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.விதிகள் அப்பட்டமாக மீறப்படும் அவலம் அமைச்சர் வேலுமணியின் துறையில் உச்சத்திற்குச் சென்று விட்டது.கமிஷன் கலாச்சாரமோ முச்சந்தியில் பேனர் வைக்கும் அளவுக்கு கடை வீதிக்கு வந்து விட்டது.

தமிழக அமைச்சரவையில் சட்டத்தின் ஆட்சியை ஆணவத்துடன் காலில் போட்டு மிதித்து,ஊழல் என்ற உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களில் முதன்மை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி திகழ்வது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைக்குனிவு.ஆகவே,தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இந்த ஸ்மார்ட் நகரங்களின் மின்னணு நிர்வாகம் தொடர்பான டெண்டர் விவகாரம் உள்ளிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் அனைத்திலும் இதுவரை வழங்கப்பட்டுள்ள டெண்டர்கள்,அந்த டெண்டர்களை பெற்றுள்ள தனியார் நிறுவனங்களுக்கும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நேர்மையான மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்புக் குழுவினை அமைத்து விசாரணை நடத்தி,அதனடிப்படையில் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும்,அவருக்குத் துணை போகும் அதிகாரிகள் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க