May 8, 2018
தண்டோரா குழு
மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கடத்தலில் கைதான பாபு என்பவரை விடுவிக்க வேண்டும் என வேடியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராமதிலகம் தலைமையிலான அமர்வு,மணல் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது.
மணல் கடத்தல்காரர்களை இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் உடந்தையாக இல்லாமல் மணல் கடத்தல் என்பது சாத்தியமில்லை.
அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் கடத்தலில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.