October 8, 2018
தண்டோரா குழு
ரயில்களில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
இரயில்வே துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கம்,கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்தில் இரயில்வே துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு,காவலர்களுக்கு குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆலோசணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ரயில்களில் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரயில் நிலையங்களில் கடந்தாண்டு ஆயிரத்து 940 குழந்தைகளும்,இந்தாண்டு ஆயிரத்து 495 குழந்தைகளும் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.ரயில்களில் 7 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளும்,22 பெண்களுக்கு எதிரான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்களில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்,ரயில்களில் நடைபெறும் குற்றங்கள் குறைந்து உள்ளதாகவும்,ரயில்களில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ரயில்வே துறையில் போதிய காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், ரயில்வே துறையில் காவலர் ஆள்பற்றாக்குறை இல்லை எனக் கூறினார்.மேலும்,ரயில் பயணங்களில் வடஇந்தியாவில் நடைபெறும் குற்றங்களுக்கு கூட தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும்,ரயில்களில் கல்வீசும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்”.இவ்வாறு பேசினார்.