October 2, 2018
தண்டோரா குழு
புதுச்சேரியில் அரசை குற்றம்சாட்டி அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் பேசிய போது மைக்கை ஆஃப் செய்ததால் கோபமடைந்து ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார்.இந்நிலையில்,உள்ளாட்சித் துறை சார்பில் கம்பன் கலையரங்கில் இன்று விழா நடைபெற்றது.இவ்விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசும் போது,அரசின் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை அறிவிக்க ஆளுநர் யார்?எனது தொகுதியில் ஏராளமான வீடுகளில் கழிவறையே இல்லை என விமர்சித்து பேசினார்.
அப்போது ஆளுநர் கிரண்பேடி அன்பழகனின் பேச்சை நிறுத்துமாறு கூறினார்.எனினும் அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்ததால் மைக்கை ஆப் செய்யுமாறு கிரண்பேடி உத்தரவிட்டதை தொடர்ந்து மைக் ஆப் செய்யப்பட்டது.
இதனால் கோபமடைந்த அன்பழகன் பொது மேடையில் ஆளுநர் கிரண்பேடியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கிரண்பேடி கைகூப்பி யூ கோ என்று எம்.எல்.ஏவிடம் கூற அதற்கு அவரோ தனது கைகளை கூப்பி யூ கோ என்று கூறினால் நீங்கள் போய்விடுவீர்களா என கேட்டார்.
ஒரு கட்டத்தில் ஒருமையிலும் அவரை அன்பழகன் பேசினார்.இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேரத்தை விரயமாக்கும் விதமாக எம்.எல்.ஏ அன்பழகன் பேசிக் கொண்டிருந்ததால் மைக்கை ஆப் செய்யக் கூறிதாக கிரண்பேடி கூறினார்.