January 8, 2026
தண்டோரா குழு
PSG செவிலியக்கல்லூரியின் 32வது விளக்கு ஏற்றும் விழா PSG IMS&R அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அறிவு,கருணை மற்றும் தொழில் முறை அர்ப்பணிப்பை கொண்டாடும் இந்நிகழ்வில், சிறப்பு வாய்ந்த சுகாதாரத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் செவிலியத்துறையில் கால்பதிக்க உள்ள மாணவிகள் ஒன்றிணைந்தனர்.
விழாவில் PSG செவிலியக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயதீபா.ஆர் வரவேற்புரையாற்றி நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.செவிலியத் தொழில் சமூகத்தில் ஏற்றுள்ள புனிதப் பொறுப்பையும்,திறமைமிக்க மற்றும் கருணைமிக்க பராமரிப்பாளர்களை உருவாக்கும் கல்லூரியின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
விழாவின் சிறப்பு அம்சமாக, முக்கிய பிரமுகர்கள் இணைந்து குத்துவிளக்கை ஏற்றினர்.இது அறிவு மற்றும் ஞானத்தின் ஒளியைக் குறிக்கும் அடையாளமாக அமைந்தது.ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததலை முறைக்கு அறிவும் திறனும் பரிமாறப்படுவதை உணர்த்தும் வகையில், அழைப்பாளர்கள் மாணவிகளுக்கு விளக்கின் ஒளியை வழங்கினர்.இதனைத்தொடர்ந்து, PSG மருத்துவமனையின் செவிலிய மேற்பார்வையாளர் டாக்டர்.அனுராதா எம்.டி, தலைமையில் சர்வதேச செவிலியர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
Haute École de Santé Vaud நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் Marielle Schmied சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உலகளாவிய செவிலியத் துறையின் முன்னேற்றம் குறித்து அருமையான கருத்துகளைப் பகிர்ந்தார்.அவரின் உரை மாணவிகளுக்கு ஆழ்ந்த சிந்தனையையும், உயர்ந்த கனவுகளை நோக்கி முன்னேற ஊக்கத்தையும் அளித்தது.
விழாவின் முதன்மை அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்ற Shanti Teresa Lakra, (துணை செவிலியர் மகப்பேறுபணியாளர் /MPHW(F)), இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பழங்குடியினர் சுகாதாரப் பிரிவு, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகள்) உரையாற்றினார்.தொலைதூர மற்றும் சவாலான பகுதிகளில் சேவை செய்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பின் தங்கிய சமூகங்களில் செவிலியர்கள் ஏற்படுத்தும் மாற்றத்தின் சக்தியை அவர் வலியுறுத்தினார்.
மேலும் மாணவர்கள் தங்கள் கற்றலை மனப்பூர்வமாக தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டுமென்றும் மற்றும் நோயாளிகளையும் ஆசிரியர்கைளையும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது உரை மாணவிகளின் மனதில் சேவை செய்யும் மனப்பான்மையை ஊக்குவிப்பதாக அமைந்தது.விழாவானது, பேராசிரியர் மீரா. எஸ், துணைமுதல்வர், PSG செவிலிய கல்லூரி, அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.