October 1, 2018
தண்டோரா குழு
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும்,எதிர்க்கட்சிகள் செய்து வைத்துள்ள பிரச்சனையை சரி செய்வதால் அதை செய்வதில் தாமதம் ஆகிறது.விரைவில் பெட்ரோல் டீசல் விலை சரிசெய்யப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
“நாட்டில் எடுத்துக்காட்டாக விளங்கும் அரசு பா.ஜ.க அரசு.வங்கி கணக்கு துவங்கியது,கேஸ் இணைப்பு கொடுத்தது, கழிவறை கட்டியது,விபத்து காப்பீடு உள்ளிட்ட சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும்,எதிர்க்கட்சிகள் செய்து வைத்துள்ள பிரச்சனையை சரிசெய்வதால் அதை செய்வதில் தாமதம் ஆகிறது என்றும் விரைவில் பெட்ரோல் டீசல் விலை சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.
பா.ஜ.க கட்சி மதவாத கட்சி என்று சிலர் குறிப்பிடுவதாகவும்,ஒருபோதும் நாங்கள் மதவாதியாக செயல்பட்டதில்லை. ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது திமுக செய்தது நாடகம் என்றும்,1.30 மணி நேரத்திற்குள் ஒரு உண்ணாவிரதத்தை நடத்தி காட்டியவர்கள் அவர்கள் என்று விமர்சனம் செய்தார்.
இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் மானம் உள்ளவர்கள் கைகோர்க்க மாட்டார்கள்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்தால் பச்சை துரோகி திமுக தான் என்றும் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்தும் அவர்களின் துரோகம் குறித்தும் ஒவ்வொரு மேடையிலும் என்னை அருகில் வைத்துக்கொண்டே பேசியவர் வைகோ,ஆனால் அவரே இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதாகவும் விமர்சித்தார்” இவ்வாறு பேசினார்.