August 29, 2018
தண்டோரா குழு
வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிப்பதற்காகவா இந்த பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதுஎன ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.இந்த திடீர் அறிவிப்பால் பலதரப்பட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து,புதிய 500,2000 ரூபாய்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.இதற்கிடையில்,இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து,2017-18ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.அதில்,விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில்,ரூ.15,310,73 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 99.3 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து,பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது?மொத்த 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம்,பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம் அல்லது தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்”என பதிவிட்டுள்ளார்.