• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அபூர்வ வகை ‘பாம்பே ஓ’ ரத்தம் உடையவருக்கு அறுவை சிகிச்சை மதுரை மருத்துவமனை சாதனை

August 5, 2016 தண்டோரா குழு

இந்திய தேசத்தின் தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் மிக அபூர்வமான `பாம்பே ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவருக்கு அதே வகை ரத்தம் செலுத்தி இருதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மனிதனுடைய ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ ஆகிய ரத்த வகைகளில் பாசிட்டிவ், நெகட்டிவ் சார்ந்த சுமார் 8 வகைகள் இருக்கின்றன. ரத்தப் பரிசோதனை மூலம் எல்லோருக்கும் இந்த ரத்த வகைகளைக் கண்டறியப்படுகின்றன.

மேலும், சமீபத்தில் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சக்திவேல்(52) என்பவருக்கு அபூர்வ `பாம்பே ஓ’ வகை ரத்தம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவருக்குத் தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் அதே வகை ரத்தம் செலுத்தி மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த வகை ரத்தம் கிடைப்பது அபூர்வம் என்பதால் இவருக்கு ரத்தம் வழங்கச் சென்னை, சேலம் பகுதிகளில் இருந்து பாம்பே ஓ வகை ரத்த கொடையாளர்களை மருத்துவர்கள் தேடிக் கண்டுபிடித்து வரவழைத்துள்ளனர்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கித்துறை தலைவர் பேராசிரியர் எம்.சிந்தா கூறுகையில், உலகளவில் 1952ம் ஆண்டு பம்பாயில் முதன்முதலில் இந்த `பாம்பே ஓ’ வகை ரத்தம் ஒருவருக்கு இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டது. பம்பாயில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ரத்த வகைக்கு `பாம்பே ஓ’ வகை ரத்தம் என்று பெயரிடப்பட்டது.

இந்த ரத்த வகை இந்தியாவில் சுமார் பத்தாயிரத்தில் ஒருவருக்கும், ஐரோப்பிய நாடுகளில் 1 லட்சம் பேரில் ஒருவருக்கும் இருக்கலாம். ஏ, பி, ஏபி, ஓ வகை பாசிட்டிவ், நெகட்டிவ் ரத்த வகையைச் சார்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், இந்தப் பாம்பே ஓ ரத்த வகையைச் சார்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப் படுத்தப்படாமல் இருப்பதால் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் மருத்துவ உலகில் அபூர்வமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

மேலும், இந்த ரத்த வகை கொடையாளர்கள் தமிழகத்தில் வெறும் 30 பேர் மட்டுமே உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரத்த வகையைச் சார்ந்த ஒருவர் கண்டறியப்பட்டார். தென்னிந்தியாவிலே முதல் முறையாக அவருக்கு அதே வகை ரத்தம் கிடைத்தது இந்த இதய அறுவை சிகிச்சையை நடந்த மிகவும் உதவியது என்று தெரிவித்தார்.

பேராசிரியர் எம்.சிந்தா மேலும் கூறும்போது, சாதாரணமாக ஓ குருப் ரத்த வகையில் மட்டுமில்லால் அனைத்து வகையிலும் ஹெச் ஆன்டிஜென் இருக்கும். இந்த ஹெச் ஆன்டிஜென் இல்லாததையே ‘பாம்பே ஓ’ ரத்த வகை என்று சொல்கிறோம்.

இந்த வகை ரத்தத்தை சாதாரண ரத்த பரிசோதனையில் கண்டறிய முடியாது. ஆன்டி ஹெச் சீரா என்ற ரத்த பரிசோதனை மூலம் தான், பாம்பே ஓ வகை ரத்தம் உடையவர்களைக் கண்டறிய முடியும்.

மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த வகை பரிசோதனை செய்யப்படாததால் பாம்பே ஓ வகை ரத்தம் உடையவர்கள், தங்களுக்கு ஓ பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பர்.

இவர்கள் மற்றவர்களுக்கு ரத்தம் தரும் போதோ அல்லது மற்றவர்களிடம் இருந்து ரத்தம் பெறும் போதோ, அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதோ இவர்களுக்கு இந்த அறிய வகை பாம்பே ஓ ரத்தம் இருப்பது கண்டறியப்படும்.

இவர்களுக்கு மாற்று வகை ரத்தம் செலுத்தினால் இறந்துவிடுவர். அதனால், ஓ பாசிட்டிவ், நெகட்டிவ் உடையவர்கள் தன்னுடைய ரத்த வகை பாம்பே ஓ வகை ரத்தம்தானா என்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று கூறினார்.

மேலும் படிக்க