October 9, 2018
தண்டோரா குழு
நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்திவெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து விசாரணைக்காக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது,நக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள்,124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை.ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை.ஜனாதிபதி,ஆளுநரின் பணிகளைத் தடுத்தால் தான் 124 போட முடியும்.ஆனால்,இந்தக் கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும்.நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா? கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம்.ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும்,என்று கோபால் தரப்பு வாதிட்டது.
பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத்,நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என கேள்வி எழுப்பினார்.அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.
இதையடுத்து,இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கோபிநாத்,124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை என்றும் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும்,ஆளுனரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரையில் கோபால் எதுவும் எழுதவில்லை என்று கூறிய நீதிபதி,கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்தார்.மேலும்,அவரை நீதிமன்ற காவலில் அனுப்ப முடியாது என்றும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.