August 16, 2018
தண்டோரா குழு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடியை எட்டியுள்ளது.
இதையடுத்து,அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நீர் இடுக்கி அணையை சென்றடையும்.ஆனால் அந்த அணையும் ஏற்கனவே நிரம்பியுள்ளதால்,செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பாதுகாப்பு கருதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார்.
இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில்,முல்லை பெரியாறு அணையை உச்சநீதி மன்றம் அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது.அதில்,அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ளது.இதனால்,அணை பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அங்கு 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.பெரியாறு அணையிலிருந்து,வைகை நதிக்கு அதிகபட்ச தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.142 அடி நீர்மட்டத்தை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக,இரு மாநிலங்கள் ஒப்புக் கொண்டபடி அங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மேலும்,அணை வலுவாக உள்ளதால்,நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை.நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க தமிழக அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.