August 27, 2018
தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்ததால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையைச் சுற்றி சீலியூர்,பனப்பாளையம்,மேடூர்,வெள்ளியங்காடு,கனுவாபாளையம்,முதுககல்லூர் மற்றும் கெம்மராம்பாளையம் போன்ற கிராமங்கள் உள்ளன.வனப்பகுதி மிகுந்த இந்த கிராமங்களில் யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவு சுற்றித் திரிகின்றன.
கடந்த 6 மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்த சிறுத்தை,விவசாய நிலங்களை பாதுகாக்கப் பயன்படுத்தும் வேட்டை நாய்களை அடித்துக் கொன்று வந்தது.மேலும்,கிராம மக்களை துரத்தியும்,உயிர் பீதியை ஏற்படுத்தி வந்தது.
பின்னர்,கிராம மக்களின் புகாரைத் தொடர்ந்து,பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மாமிசம் அடங்கிய கூண்டுகளும் அமைக்கப்பட்டன.ஆனால்,கடந்த சில நாட்களாக கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி வந்த இந்த சிறுத்தை,கூண்டில் அகப்படாமல் சுற்றித் திரிந்து வந்தது.
இந்நிலையில்,மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள சென்னாமலைக்கரடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிறுத்தை இன்று சிக்கியது.கூண்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயினை பிடிக்க வந்த சிறுத்தை கூண்டின் கதவு மூடிக்கொண்டதால் பிடிபட்டது.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை மீட்டனர்.
இதனையடுத்து, மக்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தை கூண்டோடு மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.ஊர் பகுதிகளை கடந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுத்தை அங்கு பாதுகாப்பாக கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்,
“ஊர் பகுதிக்குள் சுற்றித்திரிந்து வந்த இந்த சிறுத்தைக்கு மூன்று முதல் நான்கு வயதிருக்கலாம்.வனத்தை நோக்கி மக்களின் வாழ்விடங்கள் விரிவாக்கப்படுவதே இது போன்ற மனித விலங்கின மோதல்கள் தொடர காரணம்,” என்றார்.
கடந்த 6 மாதங்களாகக் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த சம்பவத்தால் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.