January 24, 2018
தண்டோரா குழு
கால்நடைதீவன ஊழல் தொடர்பான 3 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கும், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டுகள் சிறையும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 1992-93 ம் ஆண்டுகளில் பீகார் முதல்வராக இருந்த போது ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
மாட்டு தீவன ஊழல்தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது மொத்தம் 6 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவ்விவகாரத்தில் 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்ற போதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் மரணமடைந்து விட்டனர். இதையடுத்து மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,ஜார்கண்ட தலைநகர் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் தலைமையிலான அமர்வுலாலு மீதான கால்நடைதீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கில் லாலு பிரசாத்துக்கும், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டுகள் சிறையும் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.