August 29, 2018
தண்டோரா குழு
வெள்ள பாதிப்புக்கு பிறகு கொச்சி விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இதற்கிடையில்,கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 392 பேர் பலியாகி உள்ளனர் 33 பேரை காணவில்லை.
மழைநீர் மற்றும் பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ளதால் விமான நிலையம் முழுவதும் செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியிருந்தது.இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.மேலும்,கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புக்கு பிறகு கொச்சி விமான நிலையத்தில் இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது.முதல் விமானம் அகமதாபாத்தில் இருந்து கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.