November 27, 2018
தண்டோரா குழு
ப்ளூவெல்,மோமொ,கிகி என ஆபத்தான விளையாட்டுக்களை மொபைல் மூலம் விளையாடி வந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது நில்லு நில்லு என்ற சேலஞ்ச் பரவ தொடங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் ’கிகீ சேலஞ்ச்’ பிரபலமானது.உலகளவில் பலர் இந்த சவாலை மேற்கொண்டனர்.கிகீ சவாலால் பல சாலை விபத்துகள்,உயிரிழப்புகள் நடந்ததை யாரும் மறந்துவிட முடியாது.
இந்நிலையில்,தற்போது நில்லு நில்லு சேலஞ்ச் கேரளா இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.சாலையில் செல்லும் வாகனங்களை திடீரென வழிமறித்து, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி அல்லது கையில் காய்ந்த இலை மற்றும் குச்சிகளை பிடித்தபடி நடனமாடுவது தான் ’நில்லு நில்லு சேலஞ்ச்’.இந்த நில்லு நில்லு சேலஞ்ச் கேரளாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.தமிழ் நாட்டிலும் இந்த சேலஞ்சை பலர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த செயல் பார்ப்பதற்கு வேடிக்கையை தெரிந்தாலும்,செய்வதில் ஆபத்து உள்ளதாக கேரள காவல்துறை அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரளா காவல்துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.அந்த பதிவில் நில்லு நில்லு சேலஞ்ச் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை மீம்ஸ் வடிவில் விளக்கியுள்ளது.
சாலையில் செல்லும் வாகனத்தை நிறுத்தி இந்த சவாலை செய்கின்றனர்.ஒருவேளை வாகனங்களின் பிரேக் சரிவர இயங்கவில்லை என்றால் விபத்து ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.வேடிக்கையாக தெரியும் சில செயல்களில் ஆபத்து இருப்பதை மக்கள் உணர வேண்டும்.எனினும் அது வேடிக்கையாக இருக்கும் வரை பிரச்னையில்லை.ஆனால்,அது ஆபத்தாக மாறிவிட்டால் பிரச்னை தான்.இதனை தடுக்கும் விதமாக சாலைகளில் ரோந்துப்பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.