August 11, 2018
தண்டோரா குழு
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
கனமழையின் எதிரொலியால் வெள்ளம்,நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது.கனமழை மற்றும் நிலச்சரிவால் 30 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.கேரளா முழுவதும் பலத்த மழையினால் இயல்பு வாழக்கை முற்றிலும் முடங்கி உள்ளது.அங்கு துணை ராணுவ படையினர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
“முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கேரளாவில் கனமழை பெய்து பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள காங்கிரஸார் செய்ய வேண்டும்.கேரள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.