August 31, 2018
தண்டோரா குழு
கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரை ஆயிரத்து 27 கோடி ரூபாய் வந்து சேர்ந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,140 பேர் காணவில்லை என்றும்,தற்போது வரை 305 நிவாரண முகாம்களில் 59,296 பேர் தங்கியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,திரையுலகத்தை சேர்ந்தவர்களும் பொது மக்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
இந்நிலையில் கேரள நிவாரண நிதியாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் இதுவரை நிவாரண நிதி ஆயிரத்து 27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்தள்ளது.