August 16, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கனமழை நீடிப்பதால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்,கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே மழைநீர் மற்றும் பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ளதால் விமான நிலையம் முழுவதும் செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்,கொச்சிக்கு வரும் பயணிகள் விமானத்தை மும்பைக்கு பதில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டுக்கு திருப்பிவிடும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.