August 28, 2018
தண்டோரா குழு
கேரளாவில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.இந்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 392 பேர் பலியகியுள்ளனர் 33 பேரை காணவில்லை.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதகவும்,20945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் கேரள உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு சென்றார்.திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த ராகுல் காந்தியை கட்சியினர் வரவேற்றனர்.இதைத்தொடர்ந்து நேரடியாக செங்கனூரில் உள்ள நிவாரண முகாம் சென்ற ராகுல் காந்தி,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.