August 13, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில்,கேரளாவில் உள்ள வயநாடு,இடுக்கி,ஆழப்புலா, கோட்டயம்,எர்ணாகுளம்,பாலக்காடு,மலப்புரம்,கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அரைநூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால்,கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்,செருதோணி,ஆலுவா நகரில் 1000 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கிறது.இதுவரை 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 3 ஆயிரம் குடும்பத்தினர் மாற்று இடத்திற்கு சென்று விட்டனர்.
பாலக்காடு,மலப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கனமழை வெள்ளத்திற்கு கேரளாவில் இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில்,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர்.அந்த வகையில்,#CBE4KERALA என்ற ஹெஸ்டேக் மூலம் கோவையில் இருந்து கேரள மக்களுக்கு கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் வெள்ள நிவாரணம் திரட்டி வருகின்றனர்.
இது குறித்து இதன் ஒருங்கிணைப்பளார் ரவீந்திரன் கூறுகையில்,
“கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்து வருகிறது.அணைகள் பலவும் நிரம்பி வழிய, உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனையடுத்து பலபகுதிகளிலும் கேரளாவில் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள்.
அம்மக்களுக்கு நம்மால் முடிந்த உதவியாக கோவையில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.இதற்காக முதலில் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மூலம் கேரளாவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களிடம் பேசி அங்குள்ள மக்களுக்கு என்ன என்ன பொருட்கள் தேவை என்பதை உணர்ந்து தற்போது வெள்ள நிவாரணம் பெற்று வருகிறோம்.
இதற்காக கோவையில் உள்ள 40க்கும்மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளோம்.#CBE4KERALA என்ற ஹெஸ்டேக் மூலம் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் கேரள மக்களுக்காக நிவாரணம் பெற்று வருகின்றோம்”.இவ்வாறு கூறினார்.
இது குறித்து பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியிடம் கூறுகையில்,
“பாலக்காடு மாவட்டத்தில் கனமழையால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.உடனடியாக அவர்களுக்கு நாள்தோறும் பயன்படுத்த கூடிய அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகிறது.இதனால் உதவ நினைப்பவர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.
கேரள மக்களுக்காக சகோதரத்துவம் கொண்ட கோவை மக்கள் அதிகம் வெள்ள நிவாரணம் அளிக்க வேண்டும் என அவ்வமைப்புக்கள் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மக்கள் ஒன்றிணைந்து கேரள மக்களுக்காக உதவிக்கரம் நீட்டுவோம்.