August 20, 2018
தண்டோரா குழு
வரலாறு காணாத மழையினால் நிலைக்குலைந்துள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில் கோவையில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களின் ஆட்டோவில் உண்டியல் பொருத்தி நிதி திரட்டி வருகின்றனர்.
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம்,மண் சரிவு உள்ளிட்டவைகளால் கேரள மாநில மக்கள் தங்கள் உடமை,வீடு ஆகியவற்றை இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களின் மறுவாழ்வுக்காக,துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் கோவை தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை நகரத்தில் இயக்கப்படும் சுமார் 150 ஆட்டோக்களில் கேரள வெள்ள நிவாரணம் என்ற பெயரில் உண்டியல் பொருத்தி ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்களிடம் நிதி உதவி திரட்டப்படுகிறது.
மேலும்,ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களின் வருவாயில் ஒரு பகுதியை நிவாரண நிதியாக அளிக்கவுள்ளனர்.எனவே,பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவிக்கும் படியும் ஆட்டோ ஓட்டுனர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.