August 30, 2018
தண்டோரா குழு
கேரளாவுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 392 பேர் பலியாகி உள்ளனர் 33 பேரை காணவில்லை.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதமடைந்து உள்ளதாகவும் 20,945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் கேரள உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கேரளா சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்றது.கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும், கனமழையின் போது உதவிய அனைவருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார்.