August 29, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில்,கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 392 பேர் பலியாகி உள்ளனர் 33 பேரை காணவில்லை.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 20,945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் கேரள உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து,கேரளாவை மறுசீரமைக்கப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் உலகம் முழுவதும் வாழும் மக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதையடுத்து,கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள்,இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள்,திரையுலகினர் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில்,மலையாள நடிகர் நிவின் பாலி கேரள வெள்ள நிவாரணத்திற்காக இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.