August 18, 2018
தண்டோரா குழு
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மேலும் ரூ.5 கோடி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால்,பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்,இன்று பிரதமர் மோடி கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.ஏற்கனவே கேரளாவுக்கு
ரூ.100 கோடி நிதியுதவி அளித்திருந்த நிலையில்,இன்று மேலும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு சார்பில் இதுவரை ரூ.600 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது.அதைபோல் பல்வேறு மாநில முதல்வர்களும் கேரளாவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,ஏற்கனவே கேரளாவிற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி நிதியுதவி அளித்துள்ள நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.5கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டிருந்தேன்.அங்குள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக 5 கோடி ரூபாய் அளிப்பதுடன், பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி,300 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 19 ஆயிரம் லிட்டர் பால்,வேட்டிகள்,கைலிகள்,10 ஆயிரம் போர்வைகள்,அத்தியாவசிய மருந்துகளுடன் டாக்டர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.இப்பணிகளை ஒருங்கிணைக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையின் கீழ் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”.