September 30, 2016
தண்டோரா குழு
இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கேரள சட்டசபையில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு சென்று அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் ஒரு வேளை பதில் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவும் அதிரடி தாக்குதல்களை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டசபை சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.