August 17, 2018
தண்டோரா குழு
கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவுக்கு இதுவரை 167 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேராளவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.ஆலுவா,பத்தனமிட்டா,செங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
நிலச்சரிவு மற்றும் கனமழையினால் கடுங்கல்லூர்,பராவூர்,கல்லடி,பெரும்பாவூர்,ஆலுவா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் தங்களின் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுளள்ன.இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்,நிலச்சரிவுக்கு இதுவரை 167 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.