• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டிமுடிக்காத மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்து 3 பேர் பலி

November 24, 2017 தண்டோரா குழு

காஞ்சிபுரத்தில் கட்டிமுடிக்காத மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது65).இவரது மனைவி நவநீதம் (55). இவர்களது மகள் பவித்ரா (26). இவரது கணவர் அய்யப்பன். காங்கிரஸ் கட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மீஞ்சூரில் இவர்களது உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பழனி, நவநீதம், பவித்ரா, அய்யப்பன் ஆகியோர் காரில் சென்றனர். காரை டிரைவர் கந்தவேல் ஓட்டினார். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்து இரவு அனைவரும் காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இரவு 9 மணியளவில் மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் கார் வந்தது. செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே மேம்பாலம் கட்டுமான பணி முழுவதும் முடிவடையாமல் உள்ளது.

அப்போது பாதை மாறி வந்த கார் முடிவடையாத பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தது. சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் கார் முழுவதும் நொறுங்கியது.மேலும் கார் விழுந்த இடத்தில் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குட்டைபோல் மழை நீர் தேங்கி இருந்தது. இதில் கார் பாதி அளவு தண்ணீரில் மூழ்கியது.

இதையடுத்து கார் விழுந்ததில் காயம் அடைந்ததாலும், தண்ணீரில் மூழ்கியதாலும் அதில் இருந்த பழனி, அவரது மனைவி நவநீதம், அவர்களது மகள் பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் சிக்கி இருந்த அய்யப்பனும், டிரைவர் கநதவேலும் உடைந்த கண்ணாடி வழியாக தப்பி வெளியே வந்தனர்.

இதற்கிடையில், பின்னால் மற்றொரு காரில் வந்த பழனியின் உறவினர்கள் பாலம் முடிவடையாமல் இருப்பதை கண்டு காரை அவர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் பழனி உள்பட 3 பேர் பலியானதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிய அய்யப்பன், கந்தவேலை அவர்கள் மீட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை பாலத்தில் கார் வந்த போது கீழ்பகுதியில் உள்ள மற்றொரு சாலை வழியாக செங்குன்றம் இணைப்பு சாலையில் சென்று இருக்க வேண்டும்.

எனினும் முடிவடையாத பாலத்தில் தடுப்பு இல்லாததாலும், இரவு நேரம் என்பதாலும் வழி தெரியாமல் அவர்கள் சென்று விபத்தில் சிக்கிக் கொண்டனர். மேலும் கார் தலைகீழாக விழுந்தபோது அதில் இருந்த பாதுகாப்பு பலூன் விரிவடைந்தது. இதனால் படுகாயத்துடன் காரில் சிக்கியிருந்த பழனி, நவநீதம், பவித்ரா ஆகியோர் வெளியே வர முடியாமல் குட்டை தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர்.இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க