August 17, 2018
தண்டோரா குழு
சென்னை தலைமை செயலக முறைகேட்டை விசாரித்து வந்த ஆணைய தலைவரும் ஓய்வுப்பெற்ற நீதிபதியுமான ரகுபதி ராஜினாமா செய்துள்ளார்.
புதிய தலைமை செயலகக் கட்டிடம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி,கடந்த 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.அப்போது,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சார்பில் இந்த விசாரணைக்கு தடைக் கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் நீதிபதி ரகுபதி கமிஷனின் விசாரணைக்கு,2015-ம் ஆண்டு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து,இடைக்கால தடையை நீக்க கோரி,தமிழக அரசு கூடுதல் மனுத் தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.அப்போது ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் வகையில்,தமிழக அரசு ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,ரகுபதி ஆணையத்துக்கு வழங்கக் கூடிய சலுகைகள் அனைத்தையும் நிறுத்த வைக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆணையிட்டார்.
இந்நிலையில்,புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு பற்றி விசாரித்து வந்த ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பி வைத்தார்.மேலும்,விசாரணைக்காக தமிழக அரசு தந்த இன்னோவா கார், விசாரணை ஆவணங்கள் மற்றும் கணினியை அரசிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஆணைய தலைவர் ரகுபதி,
“3 ஆண்டுகள் விசாரணை நடைபெறாமல் இருந்ததற்கு ஆணையம் காரணம் அல்ல.ஆணையத்துக்கான தடையை நீக்க பலமுறை முறையிட்டும் விசாரிக்கவே இல்லை.மவுலிவாக்கம் கட்டட விபத்து பற்றி எந்த ஊதியமும் பெறாமல் 45 நாள் விசாரித்து அறிக்கை தந்தேன்.ஓய்வு பெற்ற பிறகு ஏதேனும் பதவியை தேடி செல்வதை போல் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். ஆணையத்தில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லாததால் பதவி விலகிறேன்” எனக் கூறியுள்ளார்.