August 10, 2018
தண்டோரா குழு
குழந்தை அழுததால் தன்னையும் தனது குடும்பத்தையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்ட இந்திய அதிகாரி புகார் அளித்துள்ளார்.
இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சரக அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த மாதம் 23ம் தேதி லண்டனில் இருந்து பெர்லினுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார்.
இந்நிலையில் விமானம் புறப்பட்ட போது,அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது.உடனே விமான ஊழியர் ஒருவர்,குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார்.இதனால் குழந்தை மேலும் அழுததால் அனைவரையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டனர்.
மேலும்,தங்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு இந்தியக் குடும்பம் குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்து சமதானப்படுத்த முயன்றதாக அவர்களையும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிட்டனர்.
இந்நிலையில்,பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி,இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில்,விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துக் கொண்டதாகவும்,இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தாங்கள் ஒருபோதும் இனபாகுபாட்டை ஊக்குவித்ததில்லை என்றும்,இந்த பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.