August 27, 2018
தண்டோரா குழு
வாட்ஸ் அப் நிறுவனம்,ஏன் இன்னும் இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும் வதந்திகள் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் அப்பாவிகள் தாக்கப்படுவதோடு, பல மரணங்களும் நிகழுகின்றன.இதைத்தடுக்க வாட்ஸ் ஆப்பிற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு,வாட்ஸ் நிறுவனத்தை வலியுறுத்தியது.அதற்கு வாட்ஸ் அப் நிறுவனமும் உறுதியளித்தது.இதற்கிடையில்,கடந்த வாரம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ்,மத்திய தகவல் தொழில்நுட்ப அதிகாரியை சந்தித்து பேசினார்.
அப்போது,மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,வாட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.மேலும்,சந்திப்பின் போது வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில்,ஒரு செய்தி எங்கிருந்து முதலில் அனுப்பப்பட்டது என்பதை அறிய ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால்,மத்திய அரசின் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு குறை தீர்க்கும் அதிகாரியை ஏன் வாட்ஸ்-ஆப் நிறுவனம் நியமிக்கவில்லை என்றும்.இதற்கு 4 வாரத்தில் பதில் தருமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மேலும் வருமான வரித்துறை மற்றும் நிதித்துறையும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.