August 11, 2018
தண்டோரா குழு
இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.மும்பை ஐஐடியின் 56 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி,
“நாட்டைக் கட்டமைப்பதில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.உலகளவில் இந்தியா பிரபலமடைய ஐஐடிக்கள் உதவியுள்ளது.உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாக ஐஐடி கல்வி நிறுவனங்கள் பங்காற்றியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.புதிய யோசனைகள் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளிவருகிறது.அரசு அலுவலகங்களில் இருந்தோ, கண்கவர் கட்டடங்களில் இருந்தோ அல்ல.இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும்.பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான அவசியம் இருக்கிறது.
மாற்று எரிசக்தி,தூய்மையான தண்ணீர்,உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுத்து ஊட்டச்சத்து குறைப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் நிகழ்த்த வேண்டும்.
புதுமை என்பது இன்றைய உலகத்தின் குறியீட்டுச் சொல்லாக உருவெடுத்திருக்கிறது.புதுமைகளைக் கண்டுபிடிக்காத சமூகம் தேக்கநிலையை அடைந்து விடும்.புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.அதன் மூலம்,புதிய கண்டுபிடிப்புகளின் மீது கொண்டுள்ள தாகம் வெளிப்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளும்,புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பாகும்”. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் எரிசக்தி அறிவியல்,பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும்,மும்பை ஐஐடிக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் உறுதியளித்தார்.