August 15, 2018
தண்டோரா குழு
கோவை இடையர்பாளையம் அருகே வித்தியாசமாக வண்டி மாட்டுக்கு மூவர்ணம் பூசி சுதந்திர தினம் கொண்டாடியுள்ளனர்.
இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.72வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில்,புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் அருகே இடையர்பாளையம் மணிகண்டன் நகரில் வசிக்கும் இம்ரான் கான் என்பவர் அவருக்கு சொந்தமான வண்டி மாட்டுக்கு தேசியக்கொடியின் மூவர்ணம் பூசி சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் இம்ரான் கான் கூறுகையில்,
“நான் மாடு வாங்கி விற்கின்ற தொழில் செய்து வருகிறேன்.பிறந்த கன்றுக்குட்டியில் இருந்து நான் இந்த மாட்டை வளர்த்து வருகின்றேன்.நான் இதை மாடு என்று நினைத்து வளர்க்கவில்லை மாறாக என் தம்பி போல் நினைத்து வளர்த்து வருகிறேன்.
என்னிடம் நிறைய ரேஸ் மாடுகள் உள்ளன.நான் இந்த ரேஸ் பந்தயத்தில் 15 வருடங்களாக இருந்து வருகிறேன்.இந்த மாடு பல ரேஸ் பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது.சமீபத்தில் நாச்சிபாளையத்தில் நடைபெற்ற 5 கி.மீ ரேஸ் பந்தயத்தில் முதலிடம் பெற்றது.இதுமட்டுமின்றி ராமநாதபுரம், செட்டிபாளையம் இடங்களில் நடைபெற்ற ரேஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்தது.
மேலும்,தேசியக்கொடியை பாக்கெட்டில் குத்தி அனைவரும் தங்களது சுதந்திர உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.அது போல மாட்டின் உடம்பில் தேசியக்கொடியின் மூவர்ணம் பூசி வரைந்து சுதந்திர தினம் கொண்டாடுவதற்காக வரைந்தேன்.இதுவரை மாட்டிற்கு யாருமே மூவர்ணம் பூசி வரைந்து கொண்டாத நிலையில்,புதுமுயற்சியாக செய்யலாம் என்று நினைத்து நான் எனது நண்பர்களான அன்வர்,கார்த்தி,வெங்கடேஷ்,கண்ணன்,அஸ்கர் ஆகியோர் சேர்ந்து வரைந்தோம்” என்றார்.