• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தலில் 3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் – மு.க. ஸ்டாலின்

November 2, 2016 தண்டோரா குழு

வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் 3 தொகுதிகளிலும் திமுக வென்று,தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 92 ஆக உயர்ந்திருக்கும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட திமுக செயலாளரும், சட்டப் பேரவைஉறுப்பினருமான தடங்கம் பெ. சுப்ரமணியின் இல்லத் திருமண விழாவில் திமுக பொருளாளரும் ,தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 5 ஆண்டுகள் இருந்த ஆட்சிதான். நாங்கள் ஏதோ கடந்த 5 மாதங்களாக ஆளுகின்ற ஆட்சியைச் செயல்படாத ஆட்சி என்று சொல்லவில்லை, இது கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்படாத ஆட்சிதான். அந்த 5 வருடமும் வீடியோ கான்பரன்சிங்கில்தான் ஆட்சியை நடத்தினார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி அடிக்கடி எடுத்துச் சொல்வார், ஆட்சி அல்ல காட்சி நடக்கிறது. அதுவும் காணொளிக் காட்சிதான் என்று தொடர்ந்து எடுத்துச் சொன்னோம். ஆனால் இன்றைக்கு அப்போலோவில் தான் எல்லாம் நடக்கிறது. வரக்கூடியவர்கள் உள்ளே செல்கிறார்கள், மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள், அமைச்சர்களைச் சந்திக்கிறார்கள் சந்தித்துவிட்டு வெளியே வந்து பேட்டி தருகிறார்கள். அதை இன்றைக்குத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

துரைமுருகன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார், ” முதல்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் நலம்பெற்று வர வேண்டும் என முதன்முதலில் அறிக்கையை வெளியிட்டவர் நம்முடைய தலைவர் கருணாநிதிதான் “, என்று குறிப்பிட்டார். என்னதான் அரசியலில் கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும் ஏன், இதே அதிமுகவில் அன்றைக்கு தலைவராக, முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர், நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்ட போது,
” நாற்பதாண்டு கால நண்பர் நலமோடு வரவேண்டும் என விரும்புகிறேன் “, என சொன்னவர் கருணாநிதி. இதுதான் நமது ஜனநாயகம், நம்முடைய அரசியல் பண்பாடு.

ஆனால் அரசியலில் கொள்கையிலே லட்சியத்திலே மாறுபாடுகள் இருக்கலாம், அதுவேறு.
இன்றைக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சிந்தித்துப் பாருங்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு தொழில்துறையிலே தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கின்றது என்பதை மத்தியில் இருக்கக்கூடிய தொழில் கொள்கை மேம்பாட்டு துறையின் சார்பில் ஒரு கருத்துக்கணிப்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். 36 மாநிலங்களில் இன்றைக்கு தமிழ்நாடு 18 வது இடத்தில் இருக்கின்றது.

ஏற்கனவே தொழில்துறையில் 2 வது, 3 வது இடத்திலே இருந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியிலே முதலிடம் பிறகு இரண்டாமிடத்திற்கு கூட வந்திருக்கின்றது. நான் மறுக்கவில்லை. ஆனால், இன்றைக்கு 18 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என வேதனையோடு குறிப்பிட்டு இருக்கிறார்கள்.எந்தவித செயல்பாடும் இல்லை.

நான் கேட்க விரும்புவது, தேர்தலுக்கு முன்னால் இவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள், ஆட்சி முடிவடையக் கூடிய நேரத்திலே முதல்வராக இருக்கக்கூடிய ஜெயலலிதா தலைமையிலே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்று தொழில்துறைக்காக நடத்தினார்கள். நியாயமாக ஆட்சிக்கு வந்து அடுத்த வருடமோ அல்லது இரண்டாவது வருடமோ நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்து கடைசி வருடத்திலே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். உலக முதலீட்டாளர்கள் எல்லாம் அதில் பங்கேற்பார்கள் எனச் சொன்னார்கள். அதில் யார் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்பதைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அந்த மாநாட்டை நடத்தியதற்கான செலவு. அதையும் தாண்டி கூட செலவாகியிருக்கிறது.

இரண்டு நாள் மாநாட்டை தொடங்கி வைத்து முடித்து வைத்தபோது முதல்வர் ஜெயலலிதா சில செய்திகளை சொன்னார். ”இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஏறக்குறைய 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்குர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன” என புதிய கணக்கு சொன்னார்.

அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தக் கணக்குகள் மட்டுமல்ல, முதலீடு எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒரு கணக்கு போட்டார். 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது என கணக்கு போட்டார்கள். 2.42 என்பதை நீங்கள் கணக்கு போட்டுப் பாருங்கள். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24 ஆம் தேதி 2 வது மாதம். 2 க்கும் 4 க்கும் இடையில் ஒரு புள்ளி வைத்து வெளியிட்டார்கள்.

இதை நான் இப்போது சொல்லவில்லை, ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளே, இந்தக் கணக்கை வைத்துதான் அந்தக் கணக்கு போட்டிருக்கிறார்கள் என செய்தியை நான் வெளியிட்டேன்.
மக்களை ஏமாற்றுவதற்காக அந்தக் கணக்கை வெளியிட்டார்கள். 2.42 லட்சம் ரூபாய் முதலீடு வந்திருக்கிறது என சொன்னீர்களே, நான் கேட்கிறேன், முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து, தேர்தல் முடிந்து 5 மாதம் ஆகியிருக்கின்றது. எங்காவது ஒரு தொழிற்சாலை தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறதா ? அதற்கான முயற்சியாவது இந்த அரசு எடுத்திருக்கிறதா ? 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது என சொன்னீர்களே, எதையாவது ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்த அரசு செயல்பட்டிருக்கிறதா ?

அதுமட்டுமல்ல. 110 என வெற்று அறிக்கையை ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா சட்டப்பேரவையில் உட்கார்ந்து கொண்டு, 110 அறிக்கையை படித்துவிட்டு 100 கோடி 1000 கோடி 2000 கோடி என அறிவிப்பு எல்லாம் வெளியிட்டார். அப்பொழுது கூட துரைமுருகன் சட்டப்பேரவையில் எழுந்து நின்று, ”இந்த திட்டங்கள் எல்லாம் வந்தால் மகிழ்ச்சிதான், ஆனால் இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி வருகிறது”, எனக் கேட்டார். அதற்கு பதில் இல்லை. பதில் என்பதை விட பேசவே விடவில்லை. இப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் இருக்கின்றது.

அதுமட்டுமா, காவிரிப் பிரச்சினையில் இன்றைய நிலை, தமிழகத்தில் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அண்டை மாநிலமாக இருக்கக்கூடிய கர்நாடக மாநிலம் அங்கிருக்க கூடிய மாற்றுக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வரவழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறார்கள்.

விரோதியாக இருக்கக்கூடிய கட்சியைக் கூட கூப்பிடுகிறார்கள். அரசியலைப் பார்க்கவில்லை, அவர்கள். மாநிலத்தின் உரிமையை பார்க்கிறார்கள். அதற்குப் பிறகு சட்டமன்றத்தை கூட்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த நிலை கர்நாடக மாநிலத்தில் நடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலை இருக்கிறதா ? திமுக தலைவர் கருணாநிதி மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளும் சொல்கிறார்கள், இதுவரைக்கும் கூட்டத்தை கூட்டினார்களா ? கடந்த 5 வருடமாக இருந்தாலும் சரி, இப்பொழுது இருக்கின்ற 5 மாதமாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாத ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஜெயலலிதா தலைமையில் இருக்கின்ற அதிமுக ஆட்சிதான்.

ஆனால், கருணாநிதி இதே தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்தவர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஒரு பொதுவான பிரச்சினையாக வந்துவிட்டால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவார், சட்டப் பேரவையில் விவாதிப்பார் அவர்களுடைய கருத்துகளைக் கேட்ட பிறகு முடிவெடுப்பார் இது கருணாநிதியின் வரலாறு, திமுகவுடைய வரலாறு. ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை.

காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள், சட்டமன்றத்தை கூட்டுங்கள் என எல்லாக் கட்சிகளும் கேட்டும், அவர்கள் கூட்டாத காரணத்தினால் எதிர்க்கட்சியாக இருக்கின்ற திமுக கூட்டிட வேண்டும் என எல்லோரும் சொன்ன காரணத்தால், நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 25 ஆம் தேதி கூட்டினோம். அந்த கூட்டத்திற்கு எல்லோரும் வந்தார்களா? ஒரு சிலர் வரவில்லை. அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா? நடந்து முடிந்த தேர்தலில் டெபாசிட் வாங்கினார்களா என்பது பற்றி கூட நான் கவலைப்படவில்லை.

அந்தக் கட்சியினுடைய தலைவராவது ஜெயித்தார்களா? தேர்தலில் நின்று பிறகு வாபஸ் வாங்கிய கதையெல்லாம் உண்டு. நாம் பெரிய கட்சி, சின்ன கட்சி என்று கருதினோமா? அதிமுகவில் இருந்து எல்லாக் கட்சி தலைவர்களுக்கும் நாம் அழைப்பு அனுப்பினோம். ஆளுங்கட்சி கூட்ட தவறிவிட்டது. அதனால் எதிர்கட்சியான திமுக கூட்டியது. 89 சட்டப் பேரவையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி திமுக.

இன்னும் சொல்லப்போனால், ஆளுங்கட்சியான அதிமுக பெற்ற வாக்கு என்ன தெரியுமா ? 1 கோடியே 75 லட்சம், திமுக பெற்ற வாக்குகள் 1 கோடியே 71 லட்சம். வித்தியாசம் வெறும் நாலே முக்கால் லட்சம்தான். ஆக 1 கோடியே 75 லட்சம் வாக்குகளைப் பெற்ற அதிமுக கூட்டாத காரணத்தால் 1 கோடியே 71 லட்சம் வாக்குகளைப் பெற்ற திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையெல்லாம், எடுத்துச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், இன்றைக்கு தமிழகத்திலே ஒரு ஆட்சி இருக்கிறது, இருக்கிறது என்பதை விட படுத்திருக்கிறது. நான் வேறெதையோ மனத்தில் வைத்து விமர்சனம் செய்யவில்லை. செயல்பட முடியாமல் இருக்கிறது. எனவே செயல்பட முடியாமல் இருக்கின்ற இந்த ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று சொன்னால், 3 இடைத்தேர்தலை இன்றைக்கு நாம் சந்திக்க இருக்கின்றோம். 89 உறுப்பினர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள் 20 ஆம் தேதிக்குப் பிறகு பாருங்கள், 89+3=92 இடங்களில் நாம் அங்கே அமரப்போகிறோம்.

அந்த நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.மக்களிடத்திலே அந்த மாற்றத்தைப் பார்க்கிறோம்” என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க